×

ஆன்மிகம் பிட்ஸ்: நவராத்திரியில் என்னென்ன படிக்கலாம்

 

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருப்பதி நங்கை

திருப்பதி நங்கையம்மன் கோயில் கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் ஊரில் திருவாழிமார்பன் திருக்கோயில் அருகே அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது. பெருமாளின் தங்கையாக இந்த அம்பாளை வழிபட்டு வருகின்றனர். இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் மூலவரான திருப்பதி நங்கை அம்பாளுக்கு தனி சந்நதியும், வயிரவருக்கு உபசந்நதியும் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் இரண்டு காலப் பூஜைகள் நடக்கின்றன.

உலகெங்கும் கல்விக் கடவுள்

ஐப்பான் நாட்டிலும் சரஸ்வதி வழிபாடு இருக்கிறது. ‘பெங்-டென்’ என்ற பெயரில் அவர்கள் கலைவாணியை வணங்குகிறார்கள். நம் நவராத்திரி கொலு போலவே, மார்ச் மாதம் 3-ஆம் தேதி, அங்கும் பொம்மை கொலு வைத்துக் கொண்டாடுகிறார்கள். அதே போல, திபெத்திலும் ‘யங்-சனம்’ என்று சரஸ்வதியை அழைக்கிறார்கள். கிரேக்கர்கள். ‘அதீனே’ என்றும், ரோமில் கல்விக் கடவுளை மினர்வா என்றும் துதித்து வழிபடுகிறார்கள். பாலித்தீவில், தென்னிந்திய நடைமுறை போலவே புத்தகங்களை அடுக்கி வைத்து பூஜை செய்கிறார்கள். இங்கே சரஸ்வதி, ‘கலுங்கன்’ என்று அழைக்கப்படுகிறாள்.

கம்பரின் சரஸ்வதி

ராமாயணம் எழுதிய கம்பர் சிறந்த சரஸ்வதி உபாசகர். தன் அந்திம காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த அவர், தான் வழிபட்டு வந்த சரஸ்வதி விக்கிரகத்தை சேரமன்னனிடம் ஒப்படைத்த பின்னரே இறைவனடி சேர்ந்தார். இறப்பதற்கு முன் அவர் ‘நவராத்திரி ஒன்பது நாட்களும் அந்த விக்கிரகத்திற்கு பூஜைகள் செய்து வாக்குறுதி பெற்றுக்கொண்டார். இன்றைக்கு அந்த சரஸ்வதி விக்கிரகம் நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒரு யானையின் மூலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு ஆராதனை செய்யப்படுகிறது.

நவராத்திரியில் என்னென்ன படிக்கலாம்

9 நாட்களும் அம்பாளுக்கான பிரத்தியேகமான நாட்கள் என்பதால் அம்பிகைக்குரிய ஸ்லோகங்களை, இசைப் பாடல்களை வாசிக்கலாம். புராணங்கள் வாசிப்பவர்கள் தேவி பாகவதம் பெரும்பாலும் படிக்கிறார்கள். இது தவிர ராமாயணம், மகாபாரதம் படிப்பதாலும் ஒன்றும் தவறு இல்லை. அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், லட்சுமி சகஸ்ரநாமம், சூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை, துர்கா அஷ்டோத்திரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் போன்ற எண்ணற்ற அம்பாள் வழிபாட்டு மந்திரங்களையும், அம்பிகையின் மீது இயற்றப்பட்ட எளிமையான பாடல்களையும் பாடலாம்.

கோயில்களில் சரஸ்வதி பூஜை

நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியனவாகும். இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ் வதிதேவி கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவற்றில், கும்பகோணம் – காரைக்கால் சாலையில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி கோயில், கண்டியூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், திருப்பூரந்துருத்தி, போரூர், நாகூர், சோம நாதபுரம் கேசவர், ஹளபேடு ஆகிய கோயில்களில் உள்ள சரஸ்வதி சந்நதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

முன்னுதித்த நங்கை

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள் முன்னுதித்த நங்கை. சுசீந்திரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற தாணுமாலய சுவாமி திருக்கோயிலின் அருகே முன்னுதித்த நங்கையம்மன் கோயில். முன்னுதித்த நங்கை அம்மனின் திருக்கதை சுசீந்திரம் கோயில் தலபுராணத்துடன் இணைந்தது. இந்த நங்கை காத்தியாயினியின் அம்சம். மும்மூர்த்தியர்களை வழிபடும் முன்பு இந்திரன் வழிபட்டது இந்த அம்பாளைத்தான். மலைமகள், அலைமகள், கலைமகள் என மும்மகளும் தன் பதியைத் தேடி வந்தபோது அவர்கள் முன்தோன்றி அவர்களின் குறைதீர்த்த தாயும், ஆதி சக்தியும் இவளே. இத்திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது.

தொகுப்பு: எஸ்.விஜயலட்சுமி

The post ஆன்மிகம் பிட்ஸ்: நவராத்திரியில் என்னென்ன படிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Navratri ,Anmigam ,Tirupati Nankai ,Tirupati Nangaiyamman Temple ,Tiruvazhimarban ,Kanyakumari District ,Tirupathisaram ,
× RELATED தெய்வம் ஒருபோதும் அருள்புரியத் தவறாது!